அண்மைய பதிவுகள்

ஒரு துளியின் பயணம்...



மழைக்காட்சிகள் ஒவ்வொன்றும் இனிமைதான்.

"ச்சோ" - வென்று பெய்யும் மழையின்போது..,
மேல் மாடி அறையிலிருந்து பார்க்கும்
வாய்ப்பு எப்பொழுதாவதுதான் கிடைக்கிறது.

ஆள் அரவமற்ற சாலைகள்.
தலைக்கு குளிக்கும் மரங்கள்.
குளுமையான மழைக்குள் நுழைந்து வந்து - நம்
உடலை வருடும் குளிர் காற்று.

ஒளிந்திருந்து நாம் பார்ப்பது தெரிந்து,
நம் ஜன்னலுக்குள் வந்து விரட்டும் சாரல்.

யாரும் நம்மை அழைப்பதை கூட கேட்க விடாமல்
ஆர்ப்பரிக்கும் அதன் ஓசை.

எத்தனையோ ஜாலம் செய்து விட்டு
கொஞ்சம் கொஞ்சமாய் மழை குறையும் போது...
மனதுக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்.

ஆனால்,
கழுவித்துடைத்த சாலைகளையும்,
பொங்கி ஓடும் ஆற்று நீரும்,
புணர்ந்து முடித்த திருப்தி போல..
பச்சை பசேல் என்று பளிச்சிடும் மரம், செடிகளையும்
பார்க்கும் போது,
மழையின் பிரிவு
கொஞ்சம் கொஞ்சமாய் மறைகிறது.

அந்த மழை விட்டுச்சென்ற அழகான சிறு துளிகள்..,
என் ஜன்னல் கம்பிகளில் தோரணமாய் நின்றது.

என் கையருகே இருந்த அந்த துளியை பார்த்தேன்.
மாலை சூரியனின் வெளிச்சத்தில் அற்புதமாய் மின்னியது.
ஜன்னலின் ஈரம் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்
அதன் உடல் பெருத்தது..,

விழுந்து விடுமோ என நினைக்கையிலேயே..
ஆ... ஐயோ..

விழுந்தே விட்டது.

என்னை கடக்காமல் நீ போக முடியாது என்று.,
காத்திருந்தது போல விழுந்த துளிக்கு கை கொடுத்து அடுத்த கம்பி.

அது கை கொடுத்ததில்
எனக்கும் கொஞ்சம் ஆறுதல்தான்.

அதன் மீதான என் பார்வை, இன்னும் கொஞ்சம் கூர்மையானது.
பாவம்., பயமும், பயணக்களைப்பும்
அதன் உடலை மெலிதாக்கியிருந்தது.
அடுத்த சில நொடிகளில் பயத்தை போக்கி, மறுபடியும் குண்டானது.
காற்று அதன் மீது வேகமாய் வீசியதால்,
அடுத்த கம்பிக்கு பயணித்தது.

அழகான அந்த துளி.., அதிலிருந்தும் விழுந்தது.
சிறு துளி படும்பாடு., பெரும் பாடாய் இருந்தது.

வானத்திலிருந்து நேராய் தரையில் விழாமல்,
கடினமான, மெதுவான அதன் பயணம்,
காரணமே இல்லாமல் நம் மனித
வாழ்க்கையை நினைவுபடுத்தியது.

கடைசி கம்பியில் அது நின்றிருந்த போது,
மனது ரொம்பவும் வலித்தது

கடைசியாய் கீழே விழுந்து... கீழே ஓடிய ஓடையில் விழுந்தது.

அது இருந்த இடம் வெறுமையாய் இருந்தது.

மழைக்காலம் சில நேரம்
சோகத்தையும் விட்டுச்செல்கிறது.


1 comments:

vidivelli said...

very nice
sempakam

Post a Comment

Blog Widget by LinkWithin