அண்மைய பதிவுகள்

பேருந்துப்பயணம்
















பேருந்து பயணம் சுகமாய் இருப்பதில்லை.

முதல் நாளின் வேலைப்பளு..,
தலை வலி தரும் முந்தைய நாள் " சரக்கு "
குளித்து முடித்து வரும் மனைவியின்
"ஜில்"-லென்ற அணைப்பு,
ஏதோவொன்று..
ஒவ்வொரு நாளும் வேகமாய் எழுந்திருக்க முடிவதில்லை.

கடன் முடித்து..,
அவசர அவசரமாய்,
குளித்து..,
சாப்பிட்டு,
உடை மற்றும் போது..,
சில நேரங்களில் சிணுங்கும்
"செல் போனில் " சிரிப்புடன் பேச முடிவதில்லை.

எல்லாம் முடித்து,
தெருவில் இறங்கி நடக்கையில்..,
முன்னே செல்லும் அழகான பெண்ணைக்கூட
ரசிக்க முடிவதில்லை.
மனம் சொல்கிறது - "5 நிமிஷம்தான் இருக்கு".
நடை போட்டி போல..,
வேகம் கூட்டி..,
எல்லோரையும் கடந்து..,
பேருந்து நிறுத்தம் நுழையும்போது..,
என்னை விட்டுச் சென்றிருக்கும் 8 மணி பேருந்து.
எரிச்சலோடு.., மனம் சொல்லும்.
"கடனை உடனை வாங்கியாவது பைக் வாங்கிரனும்"

அடுத்த பேருந்து.,
அரை மணிக்கு பிறகுதான்.
அலுவலகத்திற்கு இன்றும் தாமதம்தான்.

அடுத்த சில நிமிடங்களில்
ஆரம்பமானது அடுத்த கவலை.
வரப்போகும் பஸ் கூட்டமில்லாமல் இருக்குமா ?

எதிபார்த்தபடி கூட்டமில்லை.
கடைசி சீட்டில்
இறங்குவதற்கு வசதியாய்.,
ஓரமாய் உட்கார நினைக்கையில்,
வழி விட்டு உள்ளே போகச்சொன்ன
ஓரத்து சீட் ஆசாமியை - ஏனோ பிடிக்கவில்லை.
ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தேன் நான்.

தினமும் ஒரே பாதையில் பயணம்.
ஆனாலும் இதமான காற்று இன்பமாய் இருக்கிறது.
கல்லூரி பையன்களின் நோட்டுக்கள்
என் மடியில் சேர்ந்தன.

பள்ளிப் பிள்ளைகளின் முதுகில்
எதிர்காலத்தை நோக்கிய
நிகழ்கால சுமைகள்.

வேலைக்காக,
கல்விக்காக,
பெண்ணுக்காக,
மாப்பிள்ளைக்காக,
நட்புக்காக,
திருமணத்திற்காக,
காதலுக்காக,
உறவினரின் மறைவுக்காக,
இன்னும்..இன்னும்
பலவற்றிற்காக...
எல்லோர் பயணமும் ஒன்றாக.

கல்லூரி மாணவர்களும்,
கல்லூரி மாணவிகளும்,
கடைக்கண் பார்வையில்
காதல் வளர்த்தனர்.

என் கல்லூரிப்பருவ காதல்
கண் முன்னே வந்து போனது.

அருகே இருந்தவர்களின் பேச்சில்,
சில ஆட்டோமொபைல் நுட்பங்கள்.

நின்றிருந்த பெண்ணின் இடுப்பை,
பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை.

நாற்பது நிமிட பயணத்தில்..,
எத்தனை வேறுபட்ட மனிதர்கள்.

பைக் வாங்கும் ஆசையை
தற்காலிகமாய் ஒத்திப்போட்டேன்.

உட்கார இடம் கிடைத்து விட்டால்,
பேருந்து பயணமும் சுகமாய்தான் இருக்கிறது.

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin