ரத்த தானம் செய்வது தவறா ?
இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் டி.வி யில் குற்றம் - நடந்தது என்ன நிகழ்ச்சி பார்க்க நேர்ந்தது.
பாக்கெட் மணிக்காக ரத்த தானம் செய்யும் இளைஞர்கள் பற்றியதாக இருந்தது நிகழ்ச்சி. ஒரு உயிர் துடிக்கிறது என்றால் ரத்தம் கொடுக்க பெரும்பாலான இளைஞர்கள் தயாராக இருக்கிரார்ர்கள். இதனை பயன்படுத்தும் சில ரத்த வங்கிகள் கல்லூரி இளைஞர்களிடம் தங்கள் வேலையை தொடங்குகின்றன. பின்னர் படிப்படியாக அவர்களுக்கு பண ஆசை காட்டி திரும்ப திரும்ப ரத்தம் எடுக்கின்றனர்.
முதல் முறை ரத்தம் கொடுப்பதற்கும், இரண்டாம் முறை ரத்தம் கொடுப்பதற்கும் மூன்று மாதங்களாவது குறைந்தபட்ச இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் அதைப்பற்றியெல்லாம் சில ரத்த வங்கிகள் கவலைப்படுவதே இல்லை. வாரத்துக்கு ஒருமுறை கூட ஒருவரிடமிருந்து ரத்தம் எடுத்துக்கொள்கின்றன. அதிக பட்சமாக ரத்தம் கொடுப்பவருக்கு ஒரு யூனிட் ரத்தத்திற்கு 250 ரூபாய் தரும்சில வங்கிகள் அதனை 2000, 2500 ரூபாய்க்கு மேல் விற்று விடுகின்றன.
அடிக்கடி ரத்தம் தருவதால் ரத்தம் கொடுப்பவருக்கு (Blood donor) ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, தலை சுற்றல், ஞாபக மறதி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
ஆனால் இதையெல்லாம் விட கொடுமையான ஒரு செயல் இதன் பிறகுதான் நடைபெறுகிறது. ஒரு யூனிட் (350 மி.லி) ரத்தம் கொடையாளரிடமிருந்து பெறப்பட்டு, அதனை இரண்டு யூனிட்களாக மாற்றும் பெரும் மோசடித்தனமும் சில ரத்த வங்கிகளில் நடைபெறுகின்றனவாம். ஒரு பாக்கெட்டில் இருக்கும் ரத்தம் இரண்டு பாக்கெட்டுகளில் பிரிக்கப்பட்டு மீத அளவுக்கு நார்மல் சலைன் (Normal saline) என அழைக்கப்படும் உப்பு நீர் சேர்க்கப்படுகிறதாம். நார்மல் சலைன், மருந்துப்பொருள் என்றாலும் ரத்தம் தேவைப்படுபவருக்கு இந்த வேதிப்பொருளால் எந்த பயனும் இல்லை. ஒரு யூனிட் ரத்தம், இரண்டு யூனிட்டாக எமாற்றப்படுவதுதான் மிச்சம்.
எனக்கு தெரிந்த தோழி ஒருத்திக்கு, ரத்தம் சுரக்கும் தன்மை உடலில் இல்லாது போய் விட, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இரண்டு யூனிட் ரத்தம் கட்டாயம் வெளியிலிருந்து பெறப்பட்டு ஏற்றப்படவேண்டும். அப்படியே சில வருடங்கள் ஏற்றினார்கள். சில மாதங்களுக்கு முன்னர், ஏற்றப்பட்ட ரத்தம் அவருக்கு சேராமல் (ஒவ்வாமையால்) அவர் இறந்து போய் விட்டார். அந்த நிகழ்ச்சியை இன்னமும் மறக்க முடியாமல் இருக்கும் எங்களுக்கு, ரத்த வங்கியில் நடைபெறும் இத்தகைய மோசடிகள் ஆத்திரத்தை வரவழைத்தன .
இதற்கு என்னதான் தீர்வு ?. ரத்த தானம் செய்வதே தவறா ? எப்படிப்பட்ட ரத்த வங்கிகளில் தானம் கொடுக்க வேண்டும் ? ரத்தம் பெறுபவர்கள் எந்த மாதிரியான வங்கிகளிலிருந்து பெறலாம். யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
அன்புடன்...
பா.வேல்முருகன்.
1 comments:
Nalla Pathivu nanba... Vizhipunarvai erpadutthiyathu..
Post a Comment